Popular Posts

Thursday, December 15, 2011

தி. அனிதா தாரணி

உலகின் சமபங்கு அளவிலுள்ள பெண்கள் சமமான வாழ்க்கை வாழ்கிறார்கள் எனக் கூற முடியாது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண்தான். பின்னர்தான் ஆண் வர்க்கம்  தோன்றியது. பெண் சமூக ரீதியாக விலை மதிப்பற்றவளாக இருக்கிறாள். உலகில் உயிர்கள் தோன்றவும் வாழவும் பெண் இன்றியமையாதவள்.
உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய இனத்தை நிலைநாட்டவே போராடிக்கொண்டி ருக்கிறது. 'survival of life' என்பதுதான் ஒவ்வொரு இனத்தின் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. தொடர்ந்து வாழ்வதற்கு தன் இனத்தைப் பெருக்குவது மிகவும் முக்கியம். இனப்பெருக்கம் என்பது பெண்ணினத்திற்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
ஆணின் ஒருதுளி விந்தில் பல லட்சம் விந்தணுக்கள் உள்ளன. அறிவியலின் துணைக் கொண்டு பல லட்சம் பெண்களைக் கருத்தரிக்க வைக்க முடியும். அப்படி பல லட்சம் பெண்களைக் கருத்தரிக்க வைத்தால்கூட இந்த உலகின் அடுத்த தலைமுறையை ஈன்றெடுக்க பெண்ணுக்குப் பத்து மாதங்கள் ஆகும்தானே. ஆனால் ஒரு பெண் ஒரு மாதத்தில் ஒரு கரு முட்டையை மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். அந்தக் கரு முட்டைகூட பெண்ணின் வாழ்நாளில் பதினாறு வயது முதல் நாற்பது அல்லது அய்ம்பது வயது வரை மட்டுமே கருத்தரிக்க வாய்ப்புள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணின் வாழ்க்கையை இந்த உலகம் முழுமையாக உணர்ந்துள்ளதா?
சமத்துவம் பேசும் ஆண்கள்கூட மனதளவில் பெண்களுக்குச் சமநிலை தருகிறார்கள் எனக் கூறமுடியாது. அவர்களே அந்த நிலை என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண் என்பவள் தன்னுடைய பொருட்களில் ஒன்றாகவே ஆண்கள் நினைக்கிறார்கள். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குளத்தில், ஆற்றில் இறங்கக்கூடாது எனக் கூறிவிட்டு, அவர்களிடம் சுத்தம் இல்லை எனப் பேசும் பார்ப்பனக் கூட்டம் போலத்தான் ஆண்களும் பெண்களை வாழ்க்கை முழுதும் சமையல றையில் அடைத்துவிட்டு, பெண்கள் எந்த ஒரு சின்ன நாட்டு நடப்பு கூட தெரியாமல் இருக்கிறார்கள் எனப் பேசுகிறார்கள். இது சரியா?
பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து மீளமுடியாத நிலையில்தான் இன்றும் நம் நாடே உள்ளது. எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தாலும் இன்னும் முழுமையான மாற்றம் நிகழவில்லையே ஏன்? இத்தனை காலமாக ஊறிப்போன  விசயமாக அது உள்ளது. பழகியும் போய்விட்டது. பெண்களின் நிலை கூட அதுபோன்றதுதான்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
பொருளாதார சமநிலையின்மை:
காலத்திற்கு ஏற்றாற்போல் முன்னேறாத விவசாயக் குடும்பங்களிலும் சரி, மேல்தட்டுக் குடும்பங்களிலும் சரி பெண்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேல்வர்க்கத்தினர் பார்ப்பதற்குச் சமநிலையில் இருப்பது போல்தான் தோன்றுகிறது. ஆனால் அங்கும் பெரிய மாறுபாடுகள் இருப்பதில்லை. கணவன்களுக்கு அவர்களின் வேலைகளில் சம்பளம் பெறாத கூலிகளாகத்தான் வேலை செய்வது முதல் வீட்டிலுள்ள அனைவருடைய வேலைகளையும் பகிர்ந்துகொள்வது (சில குடும்பங்களில் முழுமையாக எல்லா வேலைகளையும் செய்வது) என எல்லா இடங்களிலும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
வேறு இடங்களில் பெண்கள் வேலையில் இருந்தாலும் அங்கும் அவர்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது. மிகக் குறைந்த கூலி, கடினமான, கீழ்த்தரமான, நிரந்தரமற்ற, வரையறுக்கப்படாத வேலைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இருந்தும் ஆண்களைவிட அய்ம்பது சதவிகிதத்துக்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. உலகின் சமபங்கு அளவிலுள்ள பெண்களுக்குக் குறைந்த அளவேதான் சொத்துகளும் இருக்கின்றன. ஆப்ரிக்க நாடுகளில் மொத்த நிலப்பரப்பில் 2% கூட பெண்களுக்குச் சொந்தமானதாக இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.
கல்வி
பெண்களுக்குக் கல்வி என்ற ஆயுதத்தைக் கொண்டுதான் அவர்கள் இழந்த சமத்துவ உலகை மீட்டெடுக்க முடியும். கல்வி கற்ற பெண்கள் இளவயதுத் திருமணம், தாழ்வான, குறைந்த சம்பள வேலைகளைச் செய்ய மறுத்துவிடுகின்றனர். இன்றைய இளம் பெண்கள் தங்கள் தாயைவிட பல மடங்கு முன்னேறியுள்ளனர். சமூகத்தில் தானும் ஒரு வீரியம் நிறைந்த அங்கம் என்பதை இன்றைய பெண்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
இதனால்தான் millennium development goals (MDGS) ஆண்குழந்தைகளுக்குச் சமமாக பெண்குழந்தைகளையும் ஆரம்பப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. 2008இல் நூற்றுக்குத் தொண்ணுற்றாறு  பெண் குழந்தைகள் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்திதான்.
பெண்கல்வியை ஊக்குவிக்க முழுமையான கல்விக் கட்டண நீக்கம், அவர்களுக்கான தனி கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பெண் கல்வி பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை:
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வேறுபாடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது பெண்களின் மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் தான். செயலாளர் (ஹிழிமிஜிணி) பாங்கி மூன் கூறுகிறார்: மூன்றில் ஒரு பெண் அடிஉதைகள் பட்டோ, பலவந்தமாக கீழ்ப்படிய வைக்கப்பட்டோ, தவறான வழிகளில் நடத்தப்பட்டோதான் வாழ்கிறார்.
வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் குறைவில்லை. பெண்களை வன்கொடுமை செய்வது என்பது போர்களின் ஆயுதங்களின் ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் பெரும்பாலான இந்த வன்கொடுமைகள் போர்க் குற்றங்களில் கணக்கிடப்படுவதில்லை.
பெரும்பாலான பாலினம் சார்பான குற்றங்கள் வறுமை மற்றும் போரால் மூடி மறைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்தல், பெண்குழந்தை  என்று தெரிந்தால் கருக்கலைப்பு  போன்றவை இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.
இனப்பெருக்கம்
பெண்ணுக்கு எத்தனை குழந்தைகளை, எப்போது, எத்தனை கால இடைவெளிகளைக் கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்  அவளுக்கே  அதிக உரிமை உண்டு.  ஒவ்வொரு குழந்தைப் பேற்றுக்குப்பின் பெண்ணின் ஆரோக்கியம் பெருமளவு பாதிக்கிறது. குழந்தைப் பேறின்போது ஏற்படும் மரணத்தால்  அவளுடைய குடும்பம் மட்டுமல்லாமல் அவளைச்  சார்ந்த சமூகமும் பாதிக்கப்படுகிறது.
பெண்ணின் சமத்துவம் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு பேசவேண்டிய தேவை இல்லை என்று தோன்றலாம். ஆனால் இன்றும் நூற்றுக்கு மூன்று அரசியல்வாதிகள் கூட பெண்கள் இல்லை என்பதே உண்மை. நம்முன் இருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது மக்கள் தொகை அதிகரிப்பு. சராசரியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 6 குழந்தைகளிலிருந்து 2.6 ஆக குறைந்துள்ளது.
பொருளாதாரத்தில் பெண்கள்
பெண்கள் உலகில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளைச் செய்கின்றனர், ஆனால் பத்து விழுக்காடு மட்டுமே வருமானம் பெறுகின்றனர், ஒரு விழுக்காடு சொத்துகள் மட்டுமே அவர்களிடம் உள்ளது.
ஊடகங்களில் பெண்கள்
பெண்களை இழிவாக நடத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம். ஆண்கள் பயன்படுத்தும் ப்ளேடு, உள்ளாடைகள், மதுவகைகள், வாசனைத்திரவியங்கள் போன்ற விளம்பரங்களில் பெண்களைத் தேவையில்லாமல்  பயன்படுத்துகின்றனர். நாடகங்களில் (தொலைக்காட்சித் தொடர்கள்) பெண்களைச் சித்தரிக்கும் விதமே பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது. பெண்கள் தன் உறவு பெண்களைப் பார்க்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணையுமே வில்லிகளாகச் சித்தரிக்கும் விதம் வினோதம்தான். விளம்பரங்கள் மூலம் பெண்களைத் தேவை இல்லாத பொருட்களை வாங்கத் தூண்டுகின்றனர். திரைப்படங்களில் பெண் கதாநாயகனோடு பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளோடு ஆடும் பதுமையாகவே காட்டப்படுகிறாள்.
சமமான நிலை பெற
1. சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை, தாமே எடுத்துக்கொள்வது என்பதைப் பெண்கள் உணர வேண்டும். பூனைகளிட மிருந்து என்றுமே எலிகளுக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை என்ற பெரியாரின் கூற்றுப்படி பெண்களே சுதந்திரத்தை எடுத்துக்கொண்டால்தான் முடியும்.
2. ஓர் ஆய்வில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சோதனைகள் (tasks) கொடுக்கப்பட்டன. ஒரு ஆணும் பெண்ணும் புறத்தோற்றத்தில் எந்த ஒரு வேறுபாடும் காட்டப்படவில்லை. அவர்களின் உடை, தலைமுடி அனைத்தும் ஒரே மாதிரியாக வைக்கப்பட்டது.  இருவரில்  பெண்ணே   அந்தச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறாள். உடலால் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. உடல் நலம் பாதிக்கப்பட்டி ருக்கும் போதுகூட தன் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தன் நிலையைப்  பற்றிக் கவலைப்படாமல் உணவைச் சமைத்துக் கொடுக்கும் பெண்களை நாம்  நிறையவே பார்த்திருக்கிறோம்தானே!
3. கல்வி என்ற கவசத்தை எந்தக் காலத்திலும் பெண்கள் தவிர்க்கக்கூடாது. பகுத்தறிவுடனான கல்வியால் உலகையே கைவசம் கொண்டுவர முடியும். எனவே பெண்கள் எப்பாடுபட்டாலும் கல்வியைப் பெற்றிட வேண்டும்.

"பிச்சைப் புகினும் கற்கை நன்றே", என அவ்வையார்  கூறியது பெண்களுக்காகத்தான்.
4. ஆண்கள் பெண்களின் முன்னற்றத்திற்கு  வழிவிடும் பொழுது பெண்ணைத்  துணைவி யாகவோ, வேறு ஒரு பெண்ணாகவோ நினைக் காமல் தன்னுடைய தாயாகவோ, தமக்கை யாகவோ மகளாகவோ நினைத்து வழிவிட வேண்டும்.
5. பெண்கள் இன்று கல்வி கற்று மருத்துவம், பொருளாதாரம், இராணுவம், அறிவியலாளர் கள், கணிபொறித்துறை போன்ற பல துறைகளில்   சாதித்துள்ளார்கள். பங்களாதேஷில்  பெண்கள் தொண்ணூறு விழுக்காடு வங்கி இருப்புகளை வைத்துள்ளனர்.
6. பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்கள் ஏற்கவேண்டிய உறுதிமொழிகள்
1. இயற்கையின் படைப்பில் நான் சமவாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
2. நான் கல்வி உரிமையை அனுபவிக்க முடியும்.
3.    எனக்குச் சொத்துரிமை உண்டு :சொத்துகளை அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.
4.    ஒப்பந்தங்களில் கையெழுத்திட எனக்கு உரிமையுண்டு.
5.    எனக்கான வாழ்க்கைத் துணைவரைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு.
6.    என் விருப்பத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய யாரும் வற்புறுத்த இயலாது.
7.    வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தின்படி என்னுடைய துணைவர் நடக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியும்.
8. மணவிலக்கு கோருவதற்கான உரிமை உண்டு.
9. நான் மதிப்பு, மரியாதைகளை ஏற்று வாழ முடியும்.
10.    நான் எனக்காகச் சிந்திக்க முடியும்.
11.    என்னுடைய மக்களைச் சரியான பாதையில் நடத்திச் செல்ல எனக்கு உரிமை உண்டு.
உறுதியுள்ள நெஞ்சினாய் வா ....வா ....வா!
உலகம் உந்தன் கைகளில் வா...வா....வா....
- தி. அனிதா தாரணி

No comments:

Post a Comment