Popular Posts

Thursday, November 24, 2011

பிழைத் திருத்தம்

பிழைத் திருத்தம்
க. அருள்மொழி
    மானமும் அறிவும் -இந்த இரண்டு வார்த்தைகளை தமிழர்கள் வாழ்க்கையில் பெற வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் உழைத்தனர். அவர்களுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையில், தி.க.காரன் என்று அழைக்கப்படுவதைப் பெருமையாகக் கொண்டு கருஞ்சட்டைக்காரர்களும் தனிவாழ்க்கையில் தன்மானம், பொதுவாழ்க்கையில் இனமானம் பெரிது என்று எண்ணி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
      " உலகத்தில் உள்ள மற்ற மக்களைப்போல திராவிட மக்களும்  மானமும் அறிவும் பெற வேண்டும் என்பதற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் " என தந்தை பெரியார் அந்த பணியை தன்மேல் போட்டுக்கொண்டு தொண்டறம் என்ற வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்திக்காட்டினார்.
    தான் விரும்பிய சமுதாயம் அமைய வேண்டுமானால் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்புத்  தடையின்றி கிடைக்கவேண்டும், அதை அந்த மக்களைக்கொண்டே போராடிப் பெறவேண்டும் என்பதற்காக மக்களோடு மக்களாக கலந்து அறிவு விதையைத் தூவினார்.
      அவருடைய உழைப்பு வீண் போகவில்லை . கல்வி வள்ளல் காமராசர் திறந்து விட்ட  கல்வி நீரோடை இன்று கலைஞர் ஆட்சியில் வெள்ளமெனப் பாய்கிறது. ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாகப் படிக்கலாம். வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை, இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடை, இலவசப் பேருந்து வசதி படிப்பில் முதலிடம் பெறுபவர்களுக்கு கணினி,முதல் தலைமுறையாகப் பட்டப் படிப்புப் படிப்பவர்களுக்கு கட்டணக் சலுகை, ,உயர் கல்வி கற்க வங்கிக்கடன் வரை கொடுத்து பண வசதி இல்லை என்பதற்காக எவரும் கல்விபெற முடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதால் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி கற்கும் உரிமை என நடுவண் அரசும் மாநில அரசும் கல்விக்காக உண்மையிலேயே செய்கின்ற திட்டங்கள் ஏராளம். இதற்கெல்லாம் அடிப்படை தந்தை பெரியாரின் அறிவாயுதப் புரட்சி.
    பெரியாரின் சிந்தனைகளை நடைமுறைப் படுத்த திமுக ஆட்சி இருக்கிறது. நடைமுறைப்படுத்தச் செய்ய திராவிடர் கழகம் இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் நமக்குச் சாதகமானவர்களாக இருந்தால் வேண்டுகோள் விடுத்தும்  மற்றவர்களாக இருந்தால் அறைகூவல் விடுத்தும் மக்கள் பணியைச் செய்யச் செய்வது பெரியார் காலத்தில் இருந்து நாம் கடைபிடித்துவரும் நடைமுறையாகும். இதற்காக மக்களிடம் எதிர்பார்ப்பது எதுவுமில்லை,அவர்களுடைய நல்வாழ்வைத் தவிர.  தி.க.காரனுடைய உழைப்பால் பயன் பெற்ற மக்கள் அதனை உணர்ந்து செய்த கைம்மாறு என்ன?
      'நன்றி என்பது உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் காட்ட வேண்டியது,உதவியை செய்தவர்கள் எதிர்பார்க்கக்கூடாதது'என்று பெரியார் சொன்னது நமக்கும் புரியும். அது தனி மனிதனுக்குப் பொருந்தும், இயக்கப் பணிகளுக்குப் பொருந்தாது என்று கருதுகிறோம்.  பெரியாரின் உழைப்பால் பலனடைந்த மக்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் பொது இதற்காகவா இவ்வளவு உழைத்தார்கள் பெரியாரும் திராவிடர் கழகத்தவரும் என்று சலிப்படைய வேண்டியிருக்கிறது.
      வகுப்புரிமை பெற்றே தீருவதென போராடி,முதல் சட்டத் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்கான திருத்தம்தான்.அதைசெய்ய வைத்தப் பெருமை பெரியாருக்குத்தான்.ஆனால் அதன் மூலம் படித்து வேலைவாய்ப்புப் பெற்ற நம்மவர்கள் முதலில் செய்வது கோயிலுக்குப் போய் பார்ப்பானுக்கு தட்சணை அழுவத்தானே. இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்று கழகம் போர்க் குரல் எழுப்பினால் 'ஜாதியே வேண்டாம் என்பவர்கள் எதற்கு ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்; தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கட்டும்'  என்று  பார்ப்பனர்களுக்கு டப்பிங் (dubbing) கொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.
        அதற்குக் காரணம் நம்முடைய கல்வி திட்டம்தான். தமிழ்நாட்டில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக 'திராவிட' ஆட்சி நடந்தாலும் கல்விமுறை என்னவோ 'ஆரிய' முறையில் தான் இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய பாடம் என்றால் 'பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வைக்கம் என்னும் ஊரில் போராட்டம் நடத்தினார்,கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு 500 தென்னை மரங்களை வெட்டினார்' என்று இரண்டு வரிகளில் அவருடைய அறுபதாண்டு உழைப்பை 'விளக்கி' விடுகிறார்கள்.
      அண்ணா ஆட்சிக்கு வந்து சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு இனி சுயமரியாதைத் திருமணம் மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கும் என எதிர் பார்த்தோம். ஆனால் ஆடம்பரமானத் திருமண மண்டபங்களில் பார்ப்பானுக்கு தாராளமாய் தட்சணை கொடுத்து 'தீ' வலம் வருகிறார்கள் தமிழர்கள்.
      'கோயில்கள் அறிவு, பணம் இரண்டையும் இழக்கும் இடம்' என்றார் பெரியார்.  இன்று கோயிலுக்குப் போவதைச் சொல்லவே ஆயிரக்கணக்கில் ஒவ்வொருவரும் பாடுபட்டு உழைக்கும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். அறிவுக்குப் பொருந்தாத பிறவி ஐயப்பன் கோயிலுக்குப் போவதற்கு டிஜிட்டல் பேனர் வைக்கிறான்.ஆடம்பர செலவு செய்கிறான் என்பது எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது என்பதை எழுத்தில் சொல்ல முடியவில்லை.
     பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்ததை அங்கீகரித்து பெண்கள்தான் ஈ .வெ.ராமசாமி என்பவருக்கு பெரியார் என்று பட்டம் அளித்தனர்.அதுவே அவருடைய இயற் பெயரைப்போல இன்றும் விளங்குகிறது. ஆனால் அந்தக் காலப் பெண்களே பரவாயில்லை போலிருக்கிறது. இன்று பெரியார் பற்றி எந்த செய்தியும் தெரியாத, தெரிந்துகொள்ளாத 'படித்த' பெண்கள் நிறைய இருக்கிறார்கள். இன்று பெண்கள் தான் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
       கணினி படிக்காத மாணவர்கள் இன்று இல்லை. அத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் இளைஞர்கள் அத்துறையில் பார்ப்பனர்கள் செய்துகொண்டிருக்கின்ற சூழ்ச்சியைக் (தமிழ்ஒருங்குறியில்(unicode)சம்ஸ்கிருத எழுத்துக்களை செருகும்முயற்சியைக் )கூட கண்டுகொள்ளாமல் இருக்க, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் முதல்வர் கலைஞர் மூலமாக நடுவண் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
அந்தோ பரிதாபத்துக்குரிய இளைஞர்களே. பணம் உங்களைத் தன்மானம் இழக்கச் செய்துவிட்டதோ? என்ன செய்வது உங்கள் பெயர்கள் கூட அநேகமாய்த் தமிழில் இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வடமொழி எழுத்து அல்லது முழுவதுமே வடமொழிப் பெயராகத்தான் இருக்கும். ஸ்டைல்!,பேஷன்! பலே!
   ஒன்றைக் கவனித்தீர்களா? தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் வடநாட்டவர்கள் தப்பித் தவறிக் கூட தமிழ் பெயர் அழகாக இருக்கிறது என்று தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துவிட மாட்டார்கள். மார்வாடிகளின் வெள்ளை நிறத்தில் மயங்கி தன் கருப்பு நிறப் பிள்ளையை 'சேட்டு' என்று அழைத்த தமிழன் இப்போதெல்லாம் மார்வாடிகளின் பெயரையே வைத்துவிடுகிறான்.
          தமிழன் இப்போது நல்ல நிலைக்கு வந்துவிட்டான். ஆம். நன்றாக சம்பாதிக்கிறான். நல்ல துணி மணி அணிகிறான். மகிழ்ச்சி. அப்புறம், பத்திரிகைகளெல்லாம் படிக்கிறான். தினமலர், தினமணி,இங்கிலீஷ் பேப்பர் கூட-ஹிந்து! அடிமை, படித்த அடிமையாகிவிட்டதை எப்படி நல்ல நிலைக்கு வந்துவிட்டதாகக் கொள்ள முடியும். பொய்க்கும் 'உண்மை'க்கும் உள்ள வேறுபாடு தெரியாதவனுக்கு அடிமைத்தனத்திற்கும் 'விடுதலை'க்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாதுதான். அந்நியனிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டதாக நம்பிக்கொண்டிருப்பவன்தானே?
    ராஜாக்களையே அடிமையாய் வைத்திருந்த கூட்டம் ராசா அமைச்சரானதைப் பொறுத்துக்கொள்ளுமா? கடவுள் என்ற கற்பனையைக் காட்டி வித்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூட்டம் யூகக் கணக்கை ஊதிப் பெருக்கி உண்மையென்று நம்பவைத்தது. பார்ப்பான் பத்திரிக்கை சொன்னதே வேதம்!. மந்திரத்தில் மாங்காய்; பாம்புக்கும் கீரிக்கும் சண்டை எனச் சொல்லி வேடிக்கை காட்டுபவன் கடைசிவரை பாம்பை வெளியில் விடமாட்டன் என்றாலும் ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டம் ஏமாந்து கொண்டுதானே இருக்கிறது? ஊழல், ஊழல்  என்று சொல்லி பத்திரிக்கை விற்பதில் பார்ப்பனக் கூட்டம்  அசகாய ஊழல் செய்தது தெரியுமா தமிழனுக்கு?
    எப்படித் தெரியும் ? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்து விடக்கூடாது; ஆனால் இலங்கை -இந்திய அணிகள் விளையாடினால் இலங்கை வென்றால் பரவாயில்லை. யார் எதிரி; யார் எதிரணி என்பது கூட தெரியாத அப்பாவியாக இருக்கிறானே தமிழன்?! 'தமிழா  இன உணர்வு கொள்!' என்கிறோம் இவன் மத உணர்வில் அல்லவா மந்தமாகத் திரிகிறான்?
 ஈழத்தில் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது  'விதி' என்கிறான்.
காவிரி உரிமை பறிபோனால் 'மிச்சமிருந்தால் விடப் போகிறான்' என்கிறான்.
முல்லைப் பெரியாறு அணை காக்க  வா என்றால் ஐயப்பன் கோயிலுக்குப் போகவேண்டும் என்கிறான்.
தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள் என்றால் அவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்கிறான்.-
எந்திரன் கட் அவுட் க்குப் பாலபிஷேகம் செய்ய பனைமர உயரம் ஏறுகிறான். அலகு குத்தி தேரிழுக்கிறான்.
கன்னடக்காரன் உதைக்கிறான்;
மலையாளி மிரட்டுகிறான்;
மராட்டியன் மண்டையை உடைக்கிறான்;
இந்திக்காரன் ஏசுகிறான்
ஏன் நீ எதுவும் திருப்பிச் செய்ய வில்லையா? என்றால்
நான்தான் ரொம்ப நல்லவன் ஆச்சே?! என்கிறான்.
'அடுத்த மாநிலத்தில் வேண்டாம் உன் நிலத்தில் உனக்கே உரிமை இல்லாத இடம் உண்டு தெரியுமா? கோயில் இருப்பது உன் நிலம். அதைக் கட்டியது நீ. அர்ச்சகனுக்கு சம்பளம் கொடுப்பதும் நீ! ஆனால் 'அவன்' இருக்கும் இடத்தில் நீ போக முடியாது. உரிமைக் குரல் எழுப்ப வேண்டாமா'? என்றால் கடவுள் சமாச்சாரம், சுத்த பத்தமாக நம்மால் இருக்க முடியாது என்கிறான்-தேவனாதன்களை,நித்யானந்தாக்களை,சங்கராச்சரிகளைப்  பார்த்த பிறகும்.
     தகவல் தொழில் நுட்பத்தில் தமிழன் தலைமையிடத்தில் இருக்கிறான். ஆனால் அந்த இடத்திற்கு அவன் வர பெரியாரின் சிந்தனை, உழைப்பு, தியாகம் காரணமென்ற தகவலை வசதியாக மறந்துவிட்டானே? அதிகாரிகளாக ,அறிவியலார்களாக,ஆட்சியர்களாக வந்துவிட்டார்கள் தமிழர்கள். இன்னமும் கூட அவனை அந்த உயரத்தில் இருந்து தள்ளிவிட கீழே பள்ளம் பறிக்கும் ஓநாய்க் கூட்டம் காத்திருப்பதும் அதைத் தடுத்துக் கொண்டிருப்பது கறுப்புச் சட்டைப் பட்டாளம்தான் என்பது கொஞ்சம் கீழே குனிந்து பார்த்தால் தெரியும்.
   உண்ணும் உணவும் பருகும் பானமும் உடுக்கும் உடையும் பேசும் பேச்சும் அடுத்தவன் சொல்லிக் கொடுத்ததாக இருக்கிறது.
கொண்டாடும் விழாக்கள் அந்நியத்தன்மையுடன் இருக்கிறது. 'எதைப்பற்றியும் கவலை இல்லை.இனவுணர்வும்  எங்களுக்கு இல்லை' என்றிருக்கும் இளைஞர்களே! கடன் வாங்கப்பட்ட எதுவும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
உன் சொந்த நாடு, சொந்த மொழி, சொந்த இனம்,அடிமைப்பட்டிருக்கிறது; உன் உரிமை  மறுக்கப்பட்டிருக்கிறது.
கடனைத் திருப்பிக் கொடு.உரிமையை மீட்டெடு!
    'கட்டுரையாளருக்கு நேர்மறையான செய்திகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சிலர் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் பிழைத் திருத்துபவன்.(proof reader )!.பிழைகள் குறையட்டும். வாழ்க்கை நிறையட்டும்.
                                     **********************************************************************************************************************